சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள்
இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில், தமிழ்நாடு தான் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது. அதன்படி, மற்ற மாநில தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ வசதிகள் யாவும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ளது. புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் தமிழகத்தில் தான் முதன் முதலாக துவங்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மாநிலங்களிலிருந்து இங்கு வரும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மருத்துவத்துறை சார்ந்த பயிற்சியினை பெறுவதற்காகவே வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து, மற்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், அவ்வப்போது இங்கு வந்து மருத்துவ கட்டமைப்பினை ஆய்வு செய்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 10 சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்ததாக தகவல்
இந்நிலையில், இன்று(அக்.,4) குஜராத் மாநில மருத்துவர்கள், 60 பேர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. இவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர் என்று தெரிகிறது. இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், குஜராத்தில் இருந்து வந்த மருத்துவர்கள், இதயவியல் சிகிச்சை பிரிவு, மார்பக சிகிச்சை பிரிவு, டயலைஸிஸ் மையங்கள், தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட 10 பிரிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இங்குள்ள மருத்துவ கட்டமைப்பினை, அவர்களது மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் அமைப்பது குறித்தும் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.