சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா?என்னும் எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பள்ளிக்கல்வித்துறை நாளை(டிச.,2) விடுமுறை அளித்துள்ளது. ஆனால் இதற்கு மழை காரணமில்லை. மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதன் அடிப்படையிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.