'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) இன்று(மே 10), 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது. 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனம், சென்ற வாரம் திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது. மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க வேண்டும் என்று கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மற்றும் எல்.என்.குப்தா ஆகியோர் அடங்கிய இரு உறுப்பினர் பெஞ்ச், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது. கடனில் சிக்கியுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தை நடத்துவதற்கு, இடைக்கால தீர்மான நிபுணராக(IRP) அப்லியாஷ் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ரூ.5 கோடி டெபாசிட் செய்ய வேண்டும்
திவாலானதை அடுத்து, பணிநீக்கங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உடனடி செலவுக்காக ரூ.5 கோடி டெபாசிட் செய்யுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உறுதிசெய்ய IRP உடன் ஒத்துழைக்குமாறு நிறுவனத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த மே 3ஆம் தேதி முதல் தனது விமான சேவைகளை நிறுத்தியது. கோ ஃபர்ஸ்ட் ஏற்கனவே மே-15 வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. பிராட் & விட்னி(P&W) உற்பத்தி நிறுவனம் இன்ஜின்களை வழங்காததால் தான் தங்களது நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் முன்பு குற்றம்சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.