Page Loader
மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
கோ ஃபர்ஸ்ட் டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் வரை நிறுத்தப்பட்டது

மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது

எழுதியவர் Sindhuja SM
May 04, 2023
04:34 pm

செய்தி முன்னோட்டம்

மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்த இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(DGCA) தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த வாரம் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டு கொண்டதை அடுத்து, மே 15 வரை பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து டிக்கெட்டுகளுக்கும் "ரீஃபண்ட்" வழங்கப்படும் என்று கோ ஃபர்ஸ்ட் அறிவித்துள்ளது. முன்னதாக 'கோ ஏர்' என அழைக்கப்பட்ட விமான நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நேற்று முன்தினம் திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது.

details

நிதி நெருக்கடிக்கு ப்ராட் & விட்னி தான் காரணம்: கோ ஃபர்ஸ்ட் 

மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க வேண்டும் என்று கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. திடீரென்று புதன்கிழமை விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பல பயணிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர். தங்கள் நிறுவனம் கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதற்கு விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி தான் காரணம் என்று கோ ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது. "ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று கோ ஃபர்ஸ்ட் தெரிவித்திருந்தது. இதை, பிராட் & விட்னி முற்றிலுமாக மறுத்துள்ளது.