கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் எதுவும் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாடியா குழுமத்திற்கு சொந்தமான 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவையை திவால் செய்வதற்கு அந்நிறுவனம் தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. "இது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு, ஆனால் நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்க இதை செய்து தான் ஆக வேண்டும்" என்று கோ ஃபர்ஸ்ட் தலைமை நிர்வாகி கௌசிக் கோனா இன்று(மே 2) கூறியுள்ளார்.
விமான சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும்?
"ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். 3,000 பேர் பணிபுரியும் 'கோ ஃபர்ஸ்ட்' ஏர்லைன்ஸ், ஏற்கனவே இது குறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கௌசிக் கோனா கூறியுள்ளார். மேலும், திவால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.