ஆகஸ்ட் 28 முதல்: GATE தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு
2025இன் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வான கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 25 அன்று தொடங்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. கேட் 2025 கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறையில் நடத்தப்படும், நகர மையங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், கேட் 2025 தேர்வுக்கான முடிவுகள் 2025ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது?
கேட் தேர்வு என்பது நாடு தழுவிய தேர்வாகும். இந்த தேர்வில் தகுதி பெறுபவர்கள் அரசின் நிதி உதவியுடன், முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடரலாம். உயர்கல்விக்கு மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் பொறியாளர் ஆட்சேர்ப்பையும் இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. கேட் 2025 மொத்தம் 30 பாடங்களில் நடத்தப்படுகின்றன. ஒருவர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தேர்வெழுதலாம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த தேர்வில் பங்குபெறலாம்.