Page Loader
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார்
என்.சங்கரய்யா

சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார்

எழுதியவர் Srinath r
Nov 15, 2023
12:09 pm

செய்தி முன்னோட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 80 வருட பொது வாழ்க்கையை கொண்ட சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட போது இருந்த 36 தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

2nd card

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநர்

சங்கரய்யாவின் தியாக பொதுவாழ்வை பாராட்டி, தமிழ்நாடு அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர் விருது' வழங்கி இவரை கௌரவித்தது. மேலும் சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இது தொடர்பான கோப்புகளை, தமிழ்நாடு அரசு ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த நிகழ்விற்கு பின்னர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.