தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி அவற்றை பெற்றுக் கொள்வார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் போன்றவை, நீதிமன்ற காவலில், பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதால், நகைகள் அங்கேயே இருந்தன.
முன்கதை
ஏலம் விடவேண்டுமென தொடரப்பட்ட வழக்கு
முன்னதாக, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமென சமூகஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,"நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது" என்று உத்தரவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து, தற்போது மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதனால், ஜெயலலிதாவிற்கு சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.