மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் மூடப்பட்ட ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர், அங்கே கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் சிகாகோ நகருக்கு சென்றார், அங்கும் தொழில்முனைவோர்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்களை கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஃபோர்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Twitter Post
தொழிற்சாலைகளை மூடிய ஃபோர்ட்
முந்தைய காலங்களில், ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால், கடைசி 2 ஆண்டுகளில் நஷ்டம் காரணமாக இந்த ஆலைகள் மூடப்பட்டன. குஜராத்தில் உள்ள தொழிற்சாலை டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் சென்னையை அடுத்த மறைமலை நகரிலுள்ள தொழிற்சாலையோ மூடப்பட்டது. இந்த நிலையில் தான், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலையை திறக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தை முடித்து நாளை சென்னை திரும்புகிறார்.