NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாடப்புத்தகங்களை விரைவில் பெற இருக்கிறார்கள். இந்நிலையில், NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து மிக முக்கியமான தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) தனது "பகுத்தறிவு" நடவடிக்கையின் கீழ் பல முக்கிய அத்தியாயங்களை நீக்கி உள்ளது. இந்த முடிவால், 11-18 வயதுக்குட்பட்ட 134 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படலாம். 6 ஆம் வகுப்பு மாணவர்கள், இனி உணவு மற்றும் அது எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள், இந்தியாவின் காலநிலை மற்றும் வனவிலங்குகள் பற்றிய அத்தியாயங்கள் 6 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரம், இந்தியா-பாகிஸ்தான் பிளவு பற்றிய அத்தியாயங்கள் நீக்கம்
சமத்துவத்திற்கான போராட்டத்தைப் பற்றிய அத்தியாயங்கள் 7 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் முகலாய ஆட்சி குறித்த தலைப்புகள் அனைத்தும் 6, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. NCERT இன் 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து வறுமை, அமைதி, வளர்ச்சி பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. குஜராத் கலவரம், இந்தியா-பாகிஸ்தான் பிளவு, பனிப்போர் மற்றும் உயிரினங்களில் இனப்பெருக்கம் ஆகிய தலைப்புகள் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை முற்றிலுமாக மத்திய அரசு நிராகரித்துள்ளது.