வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி
குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. குஜராத்திற்கு "ரெட் அலர்ட்" விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், அங்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் மின்னல் தாக்கியதால்ல் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். நேற்று குஜராத்தில் இடைவிடாத மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஜூனாகத் மற்றும் நவ்சாரி ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
குஜராத்தில் இடைவிடாத மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
மகாராஷ்டிராவிற்கும் ரெட் அலர்ட்
குஜராத்தின் தேவபூமி துவாரகா, பாவ்நகர், பருச், சூரத், தபி, வல்சாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. குஜராத் வெள்ளத்தில் இதுவரை 3 பேர் மூழ்கி உயிரிழந்தனர். குஜராத்தின் ஜூனாகத், ஜாம்நகர், தேவபூமி துவாரகா, கட்ச், சூரத், வல்சாத், நவ்சாரி மற்றும் சூரத் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், மகாராஷ்டிராவிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தின் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 27 ஆக உயர்ந்தது. ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில், பலத்த மழை பெய்ததால் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள செனாப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், நேற்று ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் இருந்து குறைந்தது 105 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று ஹிண்டன் ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசத்தில் உள்ள கவுதம் புத்த நகர் மற்றும் காசியாபாத் மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது. ஹிண்டன் என்பது யமுனை நதியின் துணை நதியாகும். எனவே, டெல்லி யமுனை நதியின் நீர்மட்டமும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.