மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி
டெல்லியில் மீண்டும் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீர்மட்டம் 205.75 மீட்டர் அளவை எட்டியுள்ளது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து யமுனைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததே இந்த நீர்மட்ட உயர்வுக்கு காரணமாகும். ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, டெல்லி அரசு உஷார் நிலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
யமுனையின் நீர்மட்டம் நாளை மாலைக்குள் அபாயக் கட்டத்தைத் தாண்டும் வாய்ப்பு
"மத்திய நீர் ஆணையத்தின் சமீபத்திய தகவலின்படி, யமுனையின் நீர்மட்டம் நாளை மாலைக்குள் அபாயக் கட்டத்தைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்பார்வையிட்டு வருகிறது." என்று டெல்லியின் வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி நேற்று தெரிவித்தார். கடந்த 13ஆம் தேதி யமுனையின் நீர்மட்டம் இதுவரை எட்டாத 208.66 மீட்டரை தாண்டி வரலாறு படைத்தது. இதனால், டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மீண்டும் யமுனையின் நீர்மட்டம் உயர்ந்தால், ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ஹிண்டன் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.