மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், 86 பேரை காணவில்லை என்பதால் 3 நாட்களாகியும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள காலாபூர் தாலுகாவுக்கு உட்பட்ட மலைச் சரிவில் அமைந்துள்ள இந்த பழங்குடியின கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை மாலை வரை 16ஆக இருந்த உயிரிழப்பு, இன்று 26ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது தவிர, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 கால்நடைகள் மீட்பு; மூன்று கால்நடைகள் பலி
"தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் பிற அரசு நிறுவனங்களின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது" என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது. மலைச் சரிவில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் உள்ள 48 வீடுகளில் குறைந்தது 17 வீடுகள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. 229 கிராமவாசிகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் காயமடைந்துள்ளனர், 111 பேர் பாதுகாப்பாக உள்ளனர், 86 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ராய்காட் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.