சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி
அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல, இந்திய அதிகாரி சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக மவுனம் கலைத்தார். தி பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பிரதமர் மோடி, குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் தாம் கருத்தில் கொள்ளுவதாக கூறினார். எவ்வாறாயினும், இது போன்ற "சில சம்பவங்கள்" அமெரிக்க-இந்திய உறவுகளை சீர்குலைக்காது என்று அவர் உறுதிப்பட கூறினார். நவம்பரில், தி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்திப்படி, அமெரிக்கா மண்ணில் பன்னுன் மீதான தாக்குதலை அமெரிக்கா முறியடித்ததாகவும், இந்த சதித்திட்டத்தில் இந்தியாவின் சாத்தியமான ஈடுபாடு குறித்து கவலை தெரிவித்ததாகவும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க இந்தியா ஒரு குழுவை நியமித்தது.
படுகொலை சதி குறித்த தகவல்களை ஆய்வு செய்வோம்: பிரதமர் மோடி
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா என்ற இந்திய நாட்டவர், ஜூன் 30 அன்று செக் குடியரசில் கைது செய்யப்பட்டார் என்றும், அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், பைனான்சியல் டைம்ஸ்-இடம் பேசிய பிரதமர் மோடி, "யாராவது எங்களுக்கு ஏதாவது ஆதாரம் கொடுத்தால், நாங்கள் அதை கருத்தில் எடுத்துக்கொள்ளவோம்" என்று கூறினார். "நம் நாட்டின் குடிமகன் ஏதாவது நல்லது அல்லது கெட்டது செய்திருந்தால், அதை நாங்கள் கவனிக்கத் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் படி நடப்பதற்கு நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார். எனினும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டும் தீவிரவாதக் குழுக்கள் குறித்து மோடி கவலை தெரிவித்தார்.
"இதுபோன்ற சம்பவங்களால் இந்தியா-அமெரிக்க உறவுகளை சீர்குலைக்க முடியாது"
இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த மோடி, "இந்த உறவை வலுப்படுத்துவதற்கு, வலுவான இருதரப்பு ஆதரவு உள்ளது. இது முதிர்ந்த மற்றும் நிலையான கூட்டாண்மைக்கான தெளிவான குறிகாட்டியாகும்" என்று கூறினார். "பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு" இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பின் முக்கிய அங்கம் என்று அவர் விவரித்தார். எவ்வாறாயினும், பன்னூன் படுகொலை சதித்திட்டத்தை குறிப்பிடும் சில சம்பவங்களினால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படாது என்று அவர் வலியுறுத்தினார்.