இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார். இக்கூட்டத்தை முடித்துக் கொண்டு, தற்போது வாஷிங்டன் சென்றுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார். காலிஸ்தான் இயக்க தலைவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு பின், முதல் முறையாக இவ்விரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில், கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விரு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில், தலைவர்களின் குழு புகைப்படம் மட்டும் எடுக்கப்படும் எனவும், இவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
கனடா குறித்து ஆண்டனி பிளிங்கனின் கருத்து என்ன?
கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய ஆண்டனி பிளிங்கன், "நாடு கடந்த அடக்குமுறை குறித்த சில குற்றச்சாட்டுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் மிக மிக கடினமாக எடுத்துக் கொண்டுள்ளோம்" என்றார். மேலும் பேசியவர், "சர்வதேச அரங்கத்தில் ஒரு நாடு இதுபோன்ற செயல்களை செய்யும் முன் அதை மீள் ஆலோசனை செய்வது முக்கியம்" என பேசி இருந்தார். ஆண்டனி பிளிங்கனின் பேச்சு இந்தியாவை நேரடியாக தொடர்புபடுத்தவில்லை என்றாலும், அவரது பேச்சு கனடாவின் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக இல்லை. இந்த சூழ்நிலையில் இவ்விரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.