விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அதற்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே திருமுருகன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சனிக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாலை யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வு பல கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிவிபத்திற்கான காரணம்
இந்த வெடிவிபத்து மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதால், தீ பட்டாசு ஆலையின் பெரும்பாலான பகுதிகளில் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பட்டாசு ஆலையில் நடந்த விபத்து அதிகாலை நேரம் என்பதால், அதிர்ஷ்டவமாக ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உள்ளே யாரேனும் ஒரு சிலர் சிக்கியுள்ளாரா என்பதையும் கண்டறியும் பணியையும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே வெடி விபத்திற்கான காரணம் குறித்து முழுமையாக தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.