அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது?
இஸ்ரேல் மீதான தாக்குதலைக் குறிப்பிடாமல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, வன்முறை ஒருபோதும் தீர்வை வழங்காது என்று கூறியது. இஸ்ரேல் போர் குறித்து பேசிய, காங்கிரஸின் செயற்குழு, "திகைப்பு மற்றும் வேதனையை" வெளிப்படுத்தியது. மேலும், நிலம் மற்றும் சுயராஜ்யத்திற்கான பாலஸ்தீனிய மக்களின் உரிமை குறித்தும் அவர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை குறித்தும் காங்கிரஸ் கட்சி பேசியிருந்தது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாஜக
பாலஸ்தீன மக்களின் நியாயமான பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதே சமயம் இஸ்ரேலியர்களின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸின் இந்த கருத்துக்களை கடுமையாக விமர்த்தித்த பாஜக, ஹமாஸ் பயங்கரவாத குழுவை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று கூறியது. காங்கிரஸ் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்கு பணயக்கைதியாக இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த போர் ஆரம்பித்ததில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு மாறாக, பாஜக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. பிரதமர் மோடி, இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா இருக்கிறது என்று இஸ்ரேல் பிரதமருக்கு நேற்று உறுதியளித்தார்.