பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு
மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பொது தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை மக்களிடம் கருத்து கேட்டு கணிப்பது தான் தேர்தல் கருத்துக்கணிப்பு என்று கூறப்படுகின்றன. இவை 100% எப்போதும் சரியாக இருப்பதில்லை. மேலும், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் இதில் பல தவறுகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருந்தன.
2024 தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியானது
2019 ஆம் ஆண்டில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு(NDA) சராசரியாக 306 இடங்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு (UPA) 120 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தன. ஆனால், உண்மையில் NDA 352 இடங்களிலும், UPA 93 இடங்களிலும் வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்பு முடிவுகளை விஞ்சியது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா டுடே-ஆக்சிஸ் மை நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA க்கு 352 இடங்கள் கிடைக்கும் என்று துல்லியமாகக் கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த வருடத்திற்கான தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு
இரண்டு கருத்துக் கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான NDA 350 இடங்களுக்கு மேல் பெறும். மேலும், இண்டியா கூட்டணி கட்சிகள் 125-150 இடங்களைப் பெறும். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நியூஸ்- டி-டைனமிக்ஸ், ரிபப்ளிக் பாரத்-பி மார்க் கணிப்புகள் இந்தியா நியூஸ்-டி-டைனமிக்ஸ் கருத்துகணிப்பின்படி, NDA 371 இடங்களிலும், இண்டியா கூட்டணி 125 இடங்களிலும், மற்றவை 47 இடங்களிலும் வெற்றி பெறும். அதேசமயம், ரிபப்ளிக் பாரத்-பி மார்க்கின் கருத்துக்கணிப்பு முடிவுகள் NDA 359 இடங்களையும், எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி 154 இடங்களையும் கைப்பற்றும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.
தமிழகத்தில் பாஜக 1-3 இடங்களில் வெற்றி பெறும்
ரிபப்ளிக் பாரத்- பி மார்க்(359), இந்தியா நியூஸ்- டி-டைனமிக்ஸ்(371), ரிபப்ளிக் பாரத்- மேட்ரைஸ்(353-368) மற்றும் டிவி 5 தெலுங்கு(359) ஆகிய நான்கு கருத்துக் கணிப்புகள், 2024 பொது தேர்தலில் பாஜகவுக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கணித்துள்ளன. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் பாஜக 1 முதல் 3 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போக, திமுக 20-22 இடங்களிலும் காங்கிரஸ் 6-8 இடங்களிலும், அதிமுக 21 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கேரளாவிலும் தாமரை மலரும்; மேற்கு வங்காளத்தில் பாஜக முன்னிலை
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, கேரளாவில் பாஜக குறைந்தபட்சம் 2-3 இடங்களிலாவது வெல்லும். இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜக கேரளாவில் ஒரு இடத்தைக் கூட வென்றதில்லை. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 13-14 இடங்களிலும், பாஜக 2-3 இடங்களிலும் UDF 4 இடங்களிலும் வெற்றிபெறும் என்று இதே கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுலை விட பாஜக முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா நியூஸ்- டி-டைனமிக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு 21 இடங்களும் திரிணாமுலுக்கு 19 இடங்களும் கிடைக்கும். ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ் கருத்துக்கணிப்பின்படி, மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு 21-25 இடங்களும் திரிணாமுலுக்கு 16-20 இடங்களும் கிடைக்கும்.
ஒடிசாவில் பாஜக முன்னிலை
நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி, ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில், பாஜக-டிடிபி-ஜனசேனா கூட்டணி 22 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளில் 15 இடங்களில் பாஜக வெற்றி பெறலாம் என்றும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி 3 முதல் 8 இடங்களைப் பெறலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சாணக்யா கருத்துக் கணிப்புகளின்படி, டெல்லியில் பாஜக பெரும் வெற்றி பெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில் டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இதே போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு, பீகாரில் முதல்வர் நிதிஷ் குமாரின் NDA கூட்டணி 29 முதல் 33 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது.