Loading...
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு மூடப்பட்டதா? அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்
வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு மூடப்பட்டதா? அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
12:36 pm

செய்தி முன்னோட்டம்

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதில் தொடர்புடைய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணிக்கு எதிரான வீடியோ ஆதாரங்களில் காட்சிகள் தெளிவாக இல்லாததால்தான் திமுக ஆட்சிக் காலத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரம் குறித்து திமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசினார்.

"ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்தவிதமான அரசியல் அல்லது தொழில் சார்ந்த தொடர்பும் இல்லை. அக்டோபர் 6-ஆம் தேதி வீரமணி மீது புகார் பெறப்பட்ட நிலைக் கூட, அடுத்த நாளே (அக்டோபர் 7) வழக்குப் பதிவு செய்யப்பட்டது".

"புகாருடன் அளிக்கப்பட்ட வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால், சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது" என்றார்.

சாடல்

"பொய்ப் பிரச்சாரம் செய்கிறது தவெக"

திமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது என்ற கூற்றை முற்றிலும் மறுத்த ரகுபதி, "ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் கிடைத்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றே திமுக ஆட்சியில் தெளிவுபடுத்தப்பட்டது. வழக்கை கைவிடும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை," என்று குறிப்பிட்டார்.

மேலும், உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல், ஒவ்வொரு விவகாரத்திலும் திமுக அரசுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திட்டமிட்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கடுமையாகச் சாடினார்.

ADVERTISEMENT

சம்மன்

ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் மகனுக்குச் சம்மன்?

இவ்வழக்கில் குற்றவாளி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டு, வழக்கை மூடி மறைக்கவும், அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை கொண்டு சேர்க்கவும் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரபல ரயில்வே தொழிற்சங்கத் தலைவரின் மகன் மீது காவல்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

அவர் மூலமாக யார் யாருக்கு பணம் விநியோகிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் மிரட்டப்பட்டார்களா என்ற விவரங்களை சென்னை மாநகர காவல்துறை சேகரித்து வருகிறது.

விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு பின் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு வீரமணி நிர்வாகப் பதவிகளில் இருந்த பல்வேறு அறக்கட்டளைகள் பற்றியும் காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT