தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்? மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆளும் தவெக அரசை வீழ்த்த சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன், மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக எழுப்பப்பட்ட புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டு, அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தி வரும் சூழலில், தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ வெளிப்படையாக புகார் அளித்துள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.க. அழகிரியின் ஆதரவாளராக நீண்டகாலமாக செயல்பட்டு வந்த பி.எம். மன்னன், கடந்த பிப்ரவரி 2026-இல் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகார்
ரூ.30 கோடி பேரம்: எம்எல்ஏ முஸ்தபா பரபரப்பு புகார்
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா, தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டுத் தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக மதுரையின் முன்னாள் துணை மேயரும், தற்போதைய அதிமுக நிர்வாகியுமான பி.எம். மன்னன் மீது பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.
ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வலைவீசப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எம்எல்ஏ முஸ்தபா அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று காலை 6 மணியளவில் மதுரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேராக ஆஜராகுமாறு பி.எம். மன்னனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை நிறைவில் முன்னாள் துணை மேயர் மன்னனை போலீசார் கைது செய்தனர்.