க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் பொன்மார் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில், நேற்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடி வந்துள்ளார். இப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அவர் குறித்த விவரம் கேட்டபோது வெற்றிமாறன் என்பவரை தொலைபேசி எண்ணை அப்பெண் வழங்கியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த முன்னாள் காதலர்
போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் நந்தினி,25, என்பதும், சென்னை பெருங்குடியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், நந்தினி வழங்கிய தொலைபேசி எண் மூலம் வெற்றிமாறனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த வெற்றிமாறன், நந்தினி உயிரிழந்தது கேட்டு கதறி அழுதார். நந்தினி என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் என்றும், கண்ணகி நகரில் உள்ள அவரது சித்தப்பா ராஜரத்தினம் என்பவரின் வீட்டில் தங்கி இருந்து பணி செய்து வருவதாகவும், வெற்றிமாறன் போலீசாரிடம் தெரிவித்தார். வழக்கு குறித்த போலீசாரின் தொடர் விசாரணையில், வெற்றிமாறன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.
காதலை மறுத்ததால் ஆத்திரத்தில் திருநம்பி வெறிச்செயல்
போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில், நந்தினியை கொலை செய்ததை வெற்றிமாறன் ஒப்புக்கொண்டார். நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றிமாறன், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி எனக் கூறப்படுகிறது. இந்த உண்மை நந்தினிக்கு தெரிய வரவே, அவர் வெற்றிமாறனின் காதலை துண்டித்துள்ளார். இந்த நிலையில் நந்தினி, ராகுல் என்ற வேறொரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன், அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நந்தினியின் பிறந்த நாளான நேற்று அவரை தனியாக சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். காலையிலிருந்து முதியோர் இல்லம் மற்றும் கோவில் என, பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர்.
சர்ப்ரைஸ் தருவதாக கூறி கொலை செய்த முன்னாள் காதலன்
மாலையில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி, பொன்மார் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு நந்தினியை, வெற்றிமாறன் அழைத்து வந்துள்ளார். பின் அவரின் கை கால்களை சங்கிலியால் கட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். பின்னர் பெட்ரோல் ஊற்றி அவரைக் கொளுத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். நந்தினியை கொலை செய்ததை வெற்றிமாறன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தாழம்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.