மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்த, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. எம்பி மஹுவா குறித்து முடிவு எடுப்பதற்கு முன், நெறிமுறைக் குழுவின் பரிந்துரைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியதை தொடர்ந்து இன்று விவாதத்திற்கு வருகிறது. முன்னதாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, எம்பி மஹுவாவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் 9ல் நடந்த தலைவர் வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நெறிமுறைக் குழு கூட்டத்தில், மஹுவாவை தகுதி நீக்கம் செய்யும் பரிந்துரை வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"பிக்சட் மேட்ச்" என விமர்சிக்கும் எதிர்கட்சிகள்
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அறிக்கையை எதிர்க்கட்சிகள் "பிக்சட் மேட்ச்" என குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, எம்பி மஹுவா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், இன்று தாக்கல் செய்யப்படும் நெறிமுறைகள் குழு மீதான வாக்கெடுப்பில், பெரும்பான்மை இருப்பின் எம்பி மஹுவா, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
மஹுவா மீதான குற்றச்சாட்டுகள் ஒரு பார்வை
அதானி குழுமத்திடம், ஹிராநந்தனி குழுமம் எரிசக்தி தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை இழந்தது. இதனால், அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி கேட்க ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷினியிடமிருந்து எம்பி மஹுவா பணம் பெற்றதாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் ஆகியோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் அனுப்பிவைத்தார். இந்நிலையில், மஹுவா, பணம் பெற்றது உண்மை எனவும், கேள்விகளை பதிவேற்றம் செய்ய நாடாளுமன்ற லாகின் ஐடியை தனக்கு வழங்கியதாகவும் தர்ஷன் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மஹுவா, தேஹாத்ராய் முன்விரோதத்தால் தன் நட்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக தெரிவித்திருந்தார்.