சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி
சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு மாணவி புதன்கிழமை காலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் வளாகத்தில் திறந்த வெளியில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இருவர் அந்த ஆண் நண்பரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மாணவியை புதர்களுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக டெக்கான் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டுர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Twitter Post
விவகாரம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை
பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி, வளாகத்தில் உள்ள விடுதியில் வசிக்கும் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஆவர். அவர் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவருடன் வாக்கிங் சென்றதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது வளாகத்தின் பின்புறத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து அண்ணா யூனிவர்சிட்டி பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களும் கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.