Loading...
தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
09:23 am

செய்தி முன்னோட்டம்

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. எனினும், "மக்களுக்குப் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்" எனக்கூறி, இத்தடையை நீக்கக்கோரித் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு முன் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வாதங்கள்

தேர்தல் ஆணையத்தின் வாதங்கள்

விசாரணையின் போது தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது நிரந்தரமான முடிவு அல்ல; உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்ததும் தேர்தல் அறிவிக்கப்படும் எனத்தெரிவித்தது.

பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதால் அத்தொகுதி காலியாக உள்ளது. எனினும், மேல்முறையீடு செய்ய நவம்பர் 24 வரை அவகாசம் இருப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியது.

"மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தொகுதி காலியான முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயமில்லை; அதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குகள் 6 மாத காலத்திற்குள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்பதால், வழக்கு முடிவுற்ற பின்பே இடைத்தேர்தல் சாத்தியம்" என்றது.

ஒத்திவைப்பு

இருதரப்பு வாதங்கள் கேட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது

விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் அவசியம் என்பதால் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேவேளையில், திருச்சி கிழக்கு தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், வழக்கு நிலுவையில் இருக்கும்வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் பதில் வாதங்களுக்காக வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்குத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT