5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் பாலின விகிதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது
மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. "ஐந்து மாநிலங்களிலும் உள்ள 679 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது." என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். ஐந்து மாநிலங்களிலும் பாலின விகிதம் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.