அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : காரணத்தினை கூறிய எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு பாஜக.,தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 25ம்தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளார்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு தரப்பு பாஜக'வுடனான கூட்டணி வேண்டாம் என்றும், ஓர் தரப்பு கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடும் காரசாரமான வாக்குவாதத்தின் நிறைவில், பாஜக'வுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரபூர்வமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து வேறு எந்த தகவலையும் இருதரப்பு தலைவர்களும் அளிக்காமல் இருந்து வந்தனர். இதனிடையே தற்போது இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு - எடப்பாடி பழனிசாமி
அதில் அவர் பேசியதாவது, அதிமுக பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரம்மாண்ட கூட்டணியமைத்து போட்டியிடுவது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அதிமுக பாஜக'வில் இருந்து விலகுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இது அதிமுக பொதுச்செயலாளர் என்னும் முறையில் நான் எடுத்த முடிவில்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு" என்று கூறியுள்ளார். மேலும் அவர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் இன்னமும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து கூறவில்லை என்றுக்கூறி வருகிறார்கள் என்றும், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது அக்கட்சியிலுள்ள அனைவரது சம்மதத்தோடு அறிவிக்கப்பட்ட முடிவு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.