கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை
சுமார் 10 ஆண்டுகளாக பாஜக-அதிமுக இடையே கூட்டணியிருந்த நிலையில், அண்மையில் இக்கூட்டணியானது முறிந்தது. இதற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை இடையே கடும் வார்த்தைப்போர் ஏற்பட்டதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி இந்த கூட்டணி முறிவு அறிவிப்பினை வெளியிட்டார். மீண்டும் இணைதல் குறித்து பாஜக மேலிடம் அவரிடம் பேச முயற்சித்த நிலையில், பழனிசாமி அதற்கு பிடிகொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அண்ணாமலை, தனது கோவை நடைப்பயணத்தை ஒத்திவைத்துவிட்டு, நேற்றுமுன்தினம் டெல்லி சென்றடைந்தார். அங்கு அவர், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பின் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையின் விளக்கங்கள் அறிக்கையாக அமித்ஷா'விடம் ஒப்படைக்கப்படும்
அப்போது அவர்கள், கூட்டணி முறிவு-கூட்டணி கட்சியினைரை தொடர்ந்து விமர்சித்து வந்த விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் பதவி குறித்து விமர்சித்து பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுக்கூறிய அவர்கள், தொடர்ந்து பல தரப்பட்ட அறிவுரைகளை அண்ணாமலைக்கு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று(அக்.,2)மாலை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்டநேரம் நடந்த இச்சந்திப்பில், அண்ணாமலை அவரிடம் கூட்டணி முறிவு குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, நடக்கவுள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் அண்ணாமலை அளித்த விளக்கங்களை அறிக்கையாக அமித்ஷாவிடம் அளிக்கவுள்ளார்கள். அதன்பின்னர், கட்சி மேலிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவுகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.