மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம் செய்ய தேவையான தண்ணீரை அணைகளிலிருந்து குறித்த காலத்திற்குள் திறக்க விடியோ திமுக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விவசாயிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் தகுந்த நேரத்தில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணத்தினால் விவசாயிகள் பயனடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், அணைகளில் போதிய தண்ணீர் இருக்கும் நிலையிலும் விடியோ திமுக அரசு திறக்கவில்லை என்றும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விடியோ அரசிடம் பலமுறை கோரிக்கைகளை வைத்தும் பயனில்லை என்று விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு
தொடர்ந்து, குடும்ப நலன் மட்டும் கருதி செயல்படும் இந்த அரசின் முதல்வர் விவசாயம் செய்ய தேவையான தண்ணீரை திறந்துவிடாதது கண்டனத்திற்குரியது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு விரைவில் வரவுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காத விடியோ திமுக அரசை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 15ம் தேதி காலை 10 மணியளவில் மதுரை மேலூரில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.