டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன்
மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர் ஆஜராகாத காரணத்தால், அவர் இல்லத்தில் சோதனை செய்து, கைது செய்யப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மாறாக சோதனையும் நடைபெறவில்லை, அவர் கைது செய்யப்படவும் இல்லை. அவருக்கு அனுப்பட்ட சம்மன் எதற்கும் அவர் பதிலளிக்கவும் இல்லை, விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிப்பதாக கூறியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அறிக்கை வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
இதை சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட பிறகு, ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்,"கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும், ஒரு பைசா ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை". "உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை" என கூறி இருந்தார். ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், நியாயமான விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.