செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 இடங்களில், 90% அடைப்பு இருப்பதாகவும், இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்த நிகழ்வுகளில், அவரை 15 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி இருந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், 8 நாள் காவலுக்கு அனுமதி அளித்தது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரியிருந்தனர்.
காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி தரப்பு மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதனையடுத்து, கடந்த வெள்ளிகிழமை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி, ICU வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை சீரான பிறகுதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் மருத்துமனை அறிக்கை வெளியிட்டது. அதனால், அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்தும், விசாரணையை தொடர முடியாமல் திணறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மருத்துமனையில் பொருத்தப்பட்டுள்ள CCTV மூலமாக, செந்தில் பாலாஜியை யாரெல்லாம் தொடர்பு கொள்கின்றனர் என்பதையும் அமலாக்கத்துறையினர் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.