அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை இரு தினங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் கைது செய்தது. நேற்று முன்தினம் முழுவதும் இதற்கான விசாரணையும் சோதனையும் நடைபெற்று வந்த நிலையில், சுமார் 18 மணிநேரம் செந்தில் பாலாஜியிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கூறினர். மேலும், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
'சிகிச்சைக்கான செலவை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும்': நீதிபதிகள்
இருதய பிரச்சனைகளுக்காக ஏற்கனவே செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை அதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து செந்தில் பாலாஜியை சோதனை செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கூறியது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தரப்பு மருத்துவர்கள் பரிசோதித்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.