Loading...
இந்திய தேர்தல் ஆணையத்தின் BLO செயலியில் புதிய 'Mark VIP' அம்சம்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சர்ச்சை
இந்திய தேர்தல் ஆணையத்தின் BLO செயலியில் புதிய 'Mark VIP' அம்சம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் BLO செயலியில் புதிய 'Mark VIP' அம்சம்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சர்ச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
02:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலை தீவிரமாக சரிபார்க்கும் SIR பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான BLO App-ல் "Mark VIP" என்ற புதிய அம்சத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் போது, குறிப்பிட்ட முக்கிய நபர்களை (VIPs) கண்டறிந்து அவர்களைப் பட்டியலில் தனியாக அடையாளம் குறியிட இந்த அம்சம் BLO அதிகாரிகளுக்கு உதவுகிறது. இந்த புதிய அம்சம் கடந்த ஜூலை 30 அன்று செயலியில் புதுப்பிக்கப்பட்ட போதிலும், ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் அதிகாரப்பூர்வ மாற்றங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஜூலை 31 அன்று இதன் அப்டேட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாடு

'Mark VIP' அம்சத்தின் பயன்பாடு என்ன?

ஒரு BLO அதிகாரி ஒரு வாக்காளரை 'VIP' எனக் குறிட்டவுடன், அப் பரிந்துரை உதவி தேர்தல் பதிவு அதிகாரி(AERO), தேர்தல் பதிவு அதிகாரி (ERO) மற்றும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின்(CEO) அலுவலகம் வரை பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படும்.

2018-ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் "Marked Electors" என வகைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் மட்டும் இதுபோன்று சுமார் 3,000 VIP வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சர்ச்சை

தீவிர நிலுவை சரிபார்ப்பும் சர்ச்சையும்

டெல்லியில் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்று வரும் இச்சூழலில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேர்தல் ஆணையர் எஸ்.எஸ். சாந்து உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களுக்கும் தகவல் பொருந்தாமை தொடர்பான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

அதே காலகட்டத்தில் இந்த 'Mark VIP' அம்சம் கொண்டுவரப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், VIP வாக்காளர்களாக குறிக்கப்படுபவர்கள் வரைவுப் பட்டியலில் தானாக சேர்க்கப்பட்டாலும், அவர்கள் நோட்டீஸ்கள் மற்றும் கோரிக்கைகளிலிருந்து விலக்கு பெற மாட்டார்கள் என்றும், அவர்கள் நேரில் விசாரணைக்கு வருவதைத் தவிர்த்து வசதி செய்து தரவே இந்த நடவடிக்கை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT