4,730 கோடி ரூபாய் மணல் கொள்ளை: களத்தில் இறங்கிய DVAC, சிக்கலில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்?
செய்தி முன்னோட்டம்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் 4,730 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) தனது முதற்கட்ட விசாரணையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 28 அரசு ஆற்று மணல் குவாரிகளிலும் அமலாக்கத் துறை நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்ட எல்லைகளை தாண்டி பெருமளவில் மணல் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. கான்பூர் ஐஐடி நிபுணர்களின் உதவியுடன் ட்ரோன்கள், ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்களைப் பயன்படுத்தி பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட ஆழம் கணக்கிடப்பட்டது. மேலும், பொக்லைன் எந்திரங்களின் ஜிபிஎஸ் தரவுகள் மூலமாக அவை இயங்கிய நேரம் மற்றும் குறிப்பிட்ட இடங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டன.
நடவடிக்கை
துரைமுருகனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2024-ஆம் ஆண்டே அமலாக்கத் துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவிற்கான முதற்கட்ட முகாந்திர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில்தான் மணல் குவாரிகளை அமைக்கும் அதிகாரமும் அனுமதியும் இருந்தது.
அப்போதைய நீர்வளத் துறை அமைச்சராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதவி வகித்ததால், இவ்விசாரணையின் நீட்சி அவருக்கு பெரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.