Loading...
நகராட்சி நிர்வாகத் துறை 2,538 பணியிடங்கள் நியமன முறைகேடு: கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

நகராட்சி நிர்வாகத் துறை 2,538 பணியிடங்கள் நியமன முறைகேடு: கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் பெருமளவில் நிதி முறைகேடுகள் மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அளித்த தகவல்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேடு

முறைகேடு மற்றும் ஹவாலா வழியில் லஞ்சப் பணம்

நகராட்சி நிர்வாகத் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் வரைவாளர் உள்ளிட்ட 2,538 முக்கியப் பணியிடங்களுக்கான தேர்வில் ஊழல் நடந்துள்ளது.

தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து பல கோடிகள் லஞ்சமாக பெறப்பட்டு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையாக, நேற்று, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆவணங்கள் பறிமுதல்

183 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, வழக்கு விசாரணைக்குத் தேவையான 170 காகித ஆவணங்கள் மற்றும் 13 டிஜிட்டல் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சுமார் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மூத்த திமுக நிர்வாகி கே.என்.நேருவும் கைது செய்யப்படுவாரா?

ADVERTISEMENT