120 கிமீ வேகம் வரை சலான் அனுப்பக் கூடாது; விரைவுச் சாலை வேக வரம்பில் நிதின் கட்கரி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள விரைவுச் சாலைகளில் மணி நேரத்திற்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு அதிவேகத்திற்கான அபராத சலான் அனுப்பக் கூடாது என்று அதிகாரிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இந்த தகவலைத் தெரிவித்தார். வாகன ஓட்டிகளுக்கு தேவையின்றி அனுப்பப்படும் அபராத நோட்டீஸ்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வேக வரம்பு
20 சதவீதம் வரை கூடுதல் வேக வரம்பிற்கு விலக்கு அளிப்பு
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே போன்ற அதிவேக சாலைகளில் தற்போது 100 முதல் 120 கிமீ வரை வேக வரம்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் 120 கிமீக்கு மேல் சென்றாலும், 20 சதவீதம் வரை கூடுதல் வேகம் (மணிக்கு சுமார் 144 கிமீ வேகம் வரை) செல்பவர்களை எச்சரித்து விட்டுவிட வேண்டும் என கட்கரி கூறினார்.
அதற்கு மேலும் அதிவேகமாக விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு மட்டுமே சலான் அனுப்ப வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சலான் முறைக்கு அப்பாற்பட்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே அரசின் இலக்காகும்.
கண்காணிப்பு முறை
நெடுஞ்சாலைகளில் ஏஐ சார்ந்த போக்குவரத்து கண்காணிப்பு முறை
இந்தியாவின் விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலைகளில் லேன் ஒழுங்குமுறையை (Lane Discipline) கண்காணிக்க தொழில்துறையினர் உதவ வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அதிவேகப் பயணம் மட்டுமின்றி, தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது போன்ற பிற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்களையும் துல்லியமாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமர்சனங்களுக்குப் பதில்
E20 எத்தனால் எரிபொருள் குறித்த விமர்சனங்களுக்கு நிதின் கட்கரி பதில்
இதே நிகழ்ச்சியில் E20 பெட்ரோல் குறித்த விமர்சனங்களுக்கும் கட்கரி பதிலளித்தார்.
2022 முதல் இந்தியாவில் 4 கோடி கார்களும் 20 கோடி இருசக்கர வாகனங்களும் E20 பெட்ரோலில் தடையின்றி இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராகப் பரப்பப்பட்ட தகவல்கள் அனைத்தும் பணம் கொடுத்து செய்யப்பட்ட போலிப் பிரச்சாரம் என்றும் அவர் சாடினார்.
மேலும் 100% எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்களுக்கான மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.