வாடிக்கையாளர் பண இழப்புக்கு வங்கியே பொறுப்பு; டிஜிட்டல் மோசடியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வங்கிகளின் கண்காணிப்புக் குறைபாடுகளால் இத்தகைய நிதி இழப்புகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சம் அவர்கள் இழந்த முழுத் தொகையையும் வங்கிகள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தற்காலிக நிறுத்தம்
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்
வழக்கமாக குறைந்த அளவிலான பணப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, திடீரென பெரிய அளவிலான பணம் மாற்றப்பட்டால், அதை வங்கிகள் ஏன் உடனடியாக தடுத்து நிறுத்தக் கூடாது எனத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கணக்கு உரிமையாளரின் பரிவர்த்தனை வரலாற்றுடன் ஒத்துப்போகாத சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை தானாக முன்வந்து நிறுத்துவதும், அதை உள்ளூர் காவல் நிலையங்களுக்குத் தெரிவித்து நேரில் சரிபார்ப்பதும் நிதி நிறுவனங்களின் கட்டாயக் கடமையாகும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
ஆர்பிஐ
ஆர்பிஐயின் புதிய 2026 கேஒய்சி விதிகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் திட்டம்
டிஜிட்டல் நிதி மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தயாரித்து வரும் 2026 கேஒய்சி திருத்த வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் நேரில் ஆய்வு செய்யவுள்ளது.
வங்கிகள் தவறு இழைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் பிரிவுகளும் இந்த வழிகாட்டுதல்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆர்பிஐக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
நிதி இழப்பு
நடப்பாண்டில் மட்டும் ₹800 கோடி நிதி இழப்பு
மத்திய அரசு தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர், அரசின் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக டிஜிட்டல் அரஸ்ட் வழக்குகள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், நடப்பாண்டில் மட்டும் இந்திய மக்கள் சுமார் ₹800 கோடியை இத்தகைய சைபர் மோசடிகளில் இழந்துள்ளதாகத் தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார்.
படித்த குடிமக்களும் அச்சத்தின் காரணமாக இத்தகைய போலி டிஜிட்டல் கைது மோசடிகளில் ஏமாறுவது குறித்து நீதிமன்றம் தனது கடுமையான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.