எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: ரூ.8 கோடி மண் திருட்டு புகாரில் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி மதிப்பிலான மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கத்தின் புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புதிய மண் திருட்டு வழக்கு அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்
அறப்போர் இயக்கம் அளித்த புகார்
திமுக வடமண்டல இளைஞரணி மாநாட்டு அரங்கத்தை சமன்படுத்துவதற்காக மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதாக அறப்போர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான புகார் அளித்திருந்தது.
இப்புகாரில், ஏரியின் 12 ஏக்கர் பரப்பளவில், சுமார் 10 முதல் 23 அடி(3 முதல் 7 மீட்டர்) ஆழம் வரை சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 45,72,058 கன அடி மண் எடுக்கப்பட்டு, எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு சொந்தமான 'அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனவும், வருவாய்த் துறை, மாநகராட்சி அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் எவ்விதப் பூர்வாங்க அனுமதியும் பெறாமல் சட்டவிரோத மண் எடுப்பு நடைபெற்றுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.