Loading...
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்?
தேனி சிறையில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி ஓடினர்

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
03:57 pm

செய்தி முன்னோட்டம்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் 36 மணி நேரத்திற்குள் 17 பேரையும் மீண்டும் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) விஷ்ணுபிரியா க.விளக்கு காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்தார். சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்திற்கு லிங்க பிரசாத் என்ற கைதியே மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாஸ்டர் பிளான்

சிறை உடைப்பின் பின்னணியும் 'மாஸ்டர் பிளான்' அமைத்த நபரும்

லிங்க பிரசாத் மீது 26 வழக்குகளும் 3 குண்டாஸ் சட்டப் பிரிவுகளும் நிலுவையில் உள்ளன.

பிணையில் வெளியே வர முடியாத சூழல் நிலவியதாலும், குண்டாஸ் ரத்து செய்யப்பட்டதாலும் இனி வெளியே வர முடியாது என்ற விரக்தியில் தப்பத் திட்டமிட்டுள்ளார்.

சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்துச் சிறைக் காவலர்களை தாக்கி, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு 17 கைதிகளும் தப்பியுள்ளனர்.

செருப்பு இல்லாமல் தப்பியதால் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, தங்களது சட்டைகளைக் கிழித்துக் கால்களில் கட்டிக்கொண்டு அவர்கள் மலையேறியுள்ளனர்.

தனிப்படைகள்

17 தனிப்படைகள் மற்றும் ட்ரோன் மூலம் தீவிர வேட்டை

கைதிகள் தப்பிய தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முதல் 24 மணி நேரத்தில் 13 கைதிகளும், அடுத்த 12 மணி நேரத்தில் 4 கைதிகளும் கைது செய்யப்பட்டனர்.

மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த 12 கைதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் புறவழிச்சாலை வழியே கேரளாவுக்குத் தப்ப முயன்ற மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய சகோதரர்கள் உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

மேலும் ரயில் தண்டவாளங்கள் வழியாகவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

வதந்தி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

கொலை செய்வதற்காக பணம் பெற்றுக் கொண்டு கைதிகள் தப்பியதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்திகளே என டிஎஸ்பி விஷ்ணுபிரியா மறுத்துள்ளார்.

கிராம மக்களின் விழிப்புணர்வும் தகவல்களுமே கைதிகளை விரைவாகப் பிடிக்க உதவியதாகத் தெரிவித்த அவர், கைது செய்யப்பட்ட 17 பேரும் பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், கடலூர் மற்றும் சேலம் சிறைகளில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ADVERTISEMENT