டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தையே உலுக்கிய பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் அளித்த முறையான சான்றுகளையும் தீர்ப்பையும் சரியாக ஆராயாமல் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது மிகப்பெரிய தவறு என்று சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றவாளிகளில் பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரைத் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துக் குற்றவாளிகளும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
சொத்துப் தகராறும் கூலிப்படை கொடூரமும்
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் டாக்டர் சுப்பையா, சென்னை R.A.புரத்தில் வசித்து வந்தார். இவருக்கும் இவருடைய உறவினரான அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி தரப்பிற்கும் இடையே 2.5 ஏக்கர் நிலம் தொடர்பாக நீண்டகாலமாகச் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நில விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று டாக்டர் சுப்பையா சாதகமான தீர்ப்பையும், பொன்னுசாமிக்கு எதிராகப் போலீஸ் புகாரையும் பெற்றார். இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரால் டாக்டர் சுப்பையா கொடூரமாக வெட்டப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 23 அன்று உயிரிழந்தார்.
மரண தண்டனை
விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை
இந்த கொலை வழக்கில் பொன்னுசாமி உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அய்யப்பன் என்பவர் அப்ரூவராக மாறினார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், கடந்த 2021-ம் ஆண்டு நீதிபதி அல்லி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கினார்: மரண தண்டனை (7 பேர்): பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை (2 பேர்): மேரி புஷ்பம் மற்றும் ஏசு ராஜன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் மேல்முறையீடு
உயர்நீதிமன்றத்தின் விடுதலை
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, தூக்கு தண்டனை பெற்ற 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை பெற்றஇருவர் என மொத்தம் 9 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பைச் சாடிய உச்சநீதிமன்றம்
இறுதித் தீர்ப்பு
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், "உயர்நீதிமன்றம் 9 பேரையும் விடுதலை செய்தது மிகப்பெரிய தவறு. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சரியல்ல". "குற்றவாளிகள் 9 பேரின் விடுதலையையும் ரத்து செய்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது". "வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரைத் தவிர்த்து, எஞ்சிய அனைத்துக் குற்றவாளிகளும் உடனடியாகக் காவல்துறையிடம் சரணடைய வேண்டும்" என தெரிவித்துள்ளது.