LOADING...
ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை? தணிக்கை நிலவரம் குறித்த புதிய தகவல்
ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை எனத் தகவல்

ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை? தணிக்கை நிலவரம் குறித்த புதிய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

நடிகரும், தற்போது தமிழக முதல்வராகவும் இருக்கும் விஜய் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) இந்தத் திரைப்படத்திற்கு ஏற்கனவே 'ஏ' சான்றிதழ் வழங்கிவிட்டதாக ஊடங்கங்களில் தகவல் வெளியாகி இருந்தன. ஆனால், திரைப்படக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை மறுத்ததுடன், அதிகாரப்பூர்வ சென்சார் சான்றிதழ் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக கைக்கு கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

பட வெளியீடு

ஜூலை இறுதியில் வெளியாவதற்கான அதிக வாய்ப்புகள்

திரைப்படத் துறை சார்ந்த டிராக்கர்களின் தகவல்படி, கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த ஜனநாயகன் படத்தின் தணிக்கை நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிபிஎஃப்சி வாரியம் சில குறிப்பிட்ட மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் கூடிய 'ஏ' சான்றிதழைப் பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த எடிட் பட்டியலின் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் பதிப்பிற்கான சான்றிதழ் கிடைத்தவுடன் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளுக்கான பணிகளும் நிறைவடைந்து, படம் ஜூலை 24 அல்லது ஜூலை 31 ஆகிய தேதிகளில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் தாமதம்

ஜனவரி முதல் நீடித்து வரும் தொடர் தாமதங்கள்

உண்மையில் இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், படத்தில் இடம்பெற்ற சில அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படம் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுப் பல மாதங்கள் தள்ளிப்போனது. இந்த விவகாரத்தில் விரைவான சான்றிதழ் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினாலும், பின்னர் அந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு தணிக்கை வாரியத்தின் விதிமுறைகளின்படியே திருத்தங்களைச் செய்ய ஒப்புக்கொண்டது.

Advertisement

ஆன்லைன் லீக்

ஆன்லைன் கசிவு அச்சுறுத்தலும் இறுதிப் படமும்

இந்த சென்சார் தாமதங்களுக்கு மத்தியில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனநாயகன் படத்தின் உயர்தர எச்டி பிரிண்ட் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்து படக்குழுவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீஸார், இந்தத் திருட்டுத்தனமான கசிவில் தொடர்புடைய சில நபர்களைக் கைது செய்தனர். சினிமா துறையில் இது விஜய்யின் கடைசித் திரைப்படம் இது என்பதால், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.

Advertisement