நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை
நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது. "அனைத்து மாணவர்களும் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு பெற வேண்டும்" என்று அந்த டாக்டர்கள் அமைப்பு கூறியுள்ளது. ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு, NTAக்கு எழுதிய கடிதத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் காணப்பட்ட முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வில் சில மாணவர்கள் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், இது புள்ளிவிவர ரீதியாக கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "மாணவர்களுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட தர்க்கம் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களின் விவரங்கள் பகிரப்படவில்லை" என்று அந்த கடிதம் கூறுகிறது.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு
மேலும், நீட் 2024 தேர்வின் கேள்வி தாள்கள் பல இடங்களில் கசிந்ததாகவும், ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. NEET-UG இல் கட்-ஆஃப் மற்றும் டாப்பர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தேர்வின் போட்டித் தன்மையை பிரதிபலிக்கிறது என்றும், தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு முகமை(NTA) கடந்த வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. மே 5 அன்று 14 வெளிநாடுகள் உட்பட 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் தான் மதிப்பெண்களும் கட்-ஆஃப்களும் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமை(NTA) மேற்கூறிய விளக்கத்தை அளித்துள்ளது.