தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே புது துணிகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளை தாண்டி நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் புதுவகையான பல பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும். ஆனால் இது போன்று பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுசூழல் மாசுபாடு அடைவதோடு, தீ விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பட்டாசுகளை வெடிக்க குறிப்பிட்ட நேரத்தினை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையன்று காலையில் 6 மணிமுதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்துக்கொள்ளவும் - தமிழக அரசு
மேலும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுப்படி பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வாங்கி வெடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி அனுமதி வழங்கியுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரியம் அன்றைய தினம் முழுவதும் காற்றின் தரத்தினை தீவிரமாக கண்காணிக்கவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் பலர் ஒன்றுக்கூடி பொது இடத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியினை அவர்கள் முன்னதாகவே அரசிடம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவில்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.