ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி
தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று முதலிடத்தினை பிடித்துள்ளது. அதனையடுத்து திருப்பூர் மாவட்டம் 97.79% மற்றும் பெரம்பலூர் 97.59% இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது. அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6,573 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி 96.38% பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதன் மூலம், மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி என்னும் மாணவி 600க்கு 600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
தச்சு தொழிலாளியின் மகள் சாதனை
இந்த சாதனை குறித்து அந்த மாணவி கூறியதாவது, நான் இவ்வளவு மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் எனக்கான ஊக்கத்தினை அளித்தார்கள். படிப்பு மட்டும் தான் சொத்து என்று கூறி எனது பெற்றோர் என்னை வளர்த்தார்கள். படிப்பது தான் எனது சொத்து என்று நினைத்து நான் படித்த காரணத்தினால் தான் இந்த அளவுக்கு என்னால் மதிப்பெண் எடுக்க முடிந்தது என்று கூறியுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணினி, வணிகவியல், கணக்கு பதிவியல் என அனைத்து பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ள இந்த மாணவியின் தந்தை ஒரு தச்சு தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.