வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதியவர், சக்கர நாற்காலி உதவி கோரியிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் இருந்த டிமாண்ட் காரணமாக சக்கர நாற்காலி அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், சக்கர நாற்காலிக்காக காத்திருக்காமல் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினலுக்கு நடந்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச்செய்தது.
ஏர் இந்தியாவிற்கு அபராதம்
இந்த விவகாரத்தில், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விசாரணை நடத்தி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. முன்னதாக இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் மற்றொரு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்குமாறு கூறியதாகவும், தெரிவித்துள்ளது. ஆனால் வீல் சேர் வரும்வரை காத்திராமல், அவர் தனது மனைவியுடன் இமிகிரேஷன் நோக்கி நடக்க முடிவெடுத்து சென்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த பயணி விமான டிக்கெட் புக்கிங் செய்தபோதே இரண்டு வீல் சேர் வேண்டுமென கேட்டிருந்தது தெரியவந்துள்ளது.