
விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்த அவர், சக்கர நாற்காலி உதவி கோரியிருந்தார்.
ஆனால் விமான நிலையத்தில் இருந்த டிமாண்ட் காரணமாக சக்கர நாற்காலி அவருக்கு கிடைக்கவில்லை.
அதனால், சக்கர நாற்காலிக்காக காத்திருக்காமல் விமானத்தில் இருந்து இறங்கி டெர்மினலுக்கு நடந்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் மற்றொரு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்குமாறு கூறியதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்கு காத்திராமல், அவர் தனது மனைவியுடன் இமிகிரேஷன் நோக்கி நடக்க முடிவெடுத்து சென்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்ததாகவும், உடனே விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவருக்கு விரைந்து சிகிச்சை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலுதவி செய்யப்பட்டு, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும், ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது