தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரையிலான மழை குறித்த விவரம் - வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதுதொடர்பான வானிலை அறிக்கை ஒன்றினை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, "மேற்குதிசை காற்றின் வேகத்தில் மாறுப்பாடு உள்ள காரணத்தினால் இன்று(ஜூலை.,15) முதல் நாளை(ஜூலை.,16) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, "17 முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை விடுப்பு
இதனையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையானது இடி மின்னலுடன் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி ஒட்டியே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் 65கி.மீ.,வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று கூறப்படுவதால் இன்று(ஜூலை.,15)முதல் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், அரபிக் கடல் பகுதிக்கு திங்கள் முதல் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையினை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.