கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன்
ஆந்திர பிரதேச ஒய்எஸ்ஆர்சிபி எம்பி பீதா மஸ்தான் ராவின் மகள், குடிபோதையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கார் ஒட்டி சாலையில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில், அந்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதை அறிந்ததும் காரை நிறுத்தாமல் தலைமறைவான அந்த பெண், அதன் பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மாதுரி என்ற அடையலாம் காணப்பட்ட அந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விபத்தில் இறந்த சூர்யா என்ற நபர் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள நடைபாதை அருகே குடிபோதையில் சாலையோரம் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவை கவனிக்காததால் மாதுரி மற்றும் அவரது தோழி பயணித்த கார் அவர் மீது மோதியது.
விபத்து நடந்ததும் தப்பித்து ஓடிய MP மகள்
விபத்து நடந்ததும், மாதுரி உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடி விட்டதாகவும், எனினும் அவரது தோழி காரை விட்டு இறங்கி, கூடியிருந்தவர்களிடம் ஆம்புலன்ஸ்-ஐ அழைத்துள்ளதாக தெரிவித்து வாக்குவாதம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்த சிலர் சூர்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சூர்யாவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரின் உறவினர்கள் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தை முற்றுகையிடவே CCTV காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் மாதுரியை கைது செய்ததாக கூறப்படுகிறது. அந்த கார் பிஎம்ஆர் (பீடா மஸ்தான் ராவ்) குரூப் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கார் என்றும் தெரியவந்தது.