
பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து
செய்தி முன்னோட்டம்
குஜராத்தின் கச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பிருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எழுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே, அதிதீவிர புயலாக இருந்த 'பிப்பர்ஜாய்' புயல் தற்போது சற்றே வலுவிழந்து மிகத்தீவிர புயலாக மாறியுள்ளது.
ஆனால், இது மீண்டும் வேகத்தை அதிகரித்து, குஜராத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சிக்கு இடையே 'பிபர்ஜாய்' புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ச்ப்பிடப்ஜ்வ்
பயிர்கள், தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களை இந்த புயல் சேதப்படுத்தும்
இந்நிலையில், கச்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், மோர்பி, ஜுனகர், மற்றும் ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் உள்ள கச்சா வீடுகள் மொத்தமாக அழிந்துபோக வாய்ப்பிருப்பதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'பிபர்ஜாய்' புயல், இந்தப் பகுதிகளில் உள்ள மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புக் கம்பங்களை வேரோடு சாய்க்கும் என்றும், ரயில் பாதையை சீர்குலைத்து, பயிர்கள், தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களை சேதப்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'பிபர்ஜாய்' புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கு தென்மேற்கே 290 கிமீ தொலைவிலும், தேவபூமி துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே 300 கிமீ தொலைவிலும், நலியாவில் இருந்து மேற்கு-தென்மேற்கே 310 கிமீ தொலைவிலும், போர்பந்தருக்கு மேற்கே 350 கிமீ தொலைவிலும், வடகிழக்கு அரபிக்கடலில் தற்போது மையம் கொண்டுள்ளது.