Loading...
'அக்வான்' தீவிர புயல் இன்று கரையைக் கடக்கிறது: ஒடிசாவில் 1 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

'அக்வான்' தீவிர புயல் இன்று கரையைக் கடக்கிறது: ஒடிசாவில் 1 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
07:53 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் தீவிர புயல், ஆந்திராவின் நரசாபுரம் முதல் ஒடிசாவின் புரி வரையிலான கடலோரப் பகுதியில் இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் 9,299 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் 305 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கோபால்பூர் மற்றும் புரி பகுதிகளையொட்டிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரி ஜெகநாதர்

புரி ஜெகநாதர் கோயில் வேண்டுகோள்

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும், இருப்பினும் கோயிலுக்கு வரத் திட்டமிடும் பக்தர்கள் வானிலை நிலவரத்திற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறும் கோயில் தலைமை நிர்வாகி அரவிந்த பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடல் சீற்றத்தைத் தொடர்ந்து, ஆந்திராவிலிருந்து மீன்பிடிக்க வந்த 80 மீனவர்கள் தங்களது 10 படகுகளுடன் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஆரியப்பள்ளி பகுதியில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும் போது பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், கடலோர மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT