குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நேற்று(டிச.,26) இரவு 12 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனையடுத்து, இந்த உரத்தொழிற்சாலையை தமிழக அரசு தற்காலிகமாக மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து வாயுக்கசிவு குறித்து ஆய்வு செய்து ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
கோரமண்டல் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய 8 டன் அமோனியா நிறுத்தி வைப்பு
இத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டுவர வசதியாக கடற்கரை பகுதியிலிருந்து தொழிற்சாலை வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே அப்பகுதி மக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு நடத்திய பின்னர் மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்நிறுவனம், 'குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது' என்றும், ' தற்காலிகமாக எண்ணூர் துறைமுகத்திலான தனது அனைத்து செயல்பாட்டுகளையும் நிறுத்தி கொள்கிறோம்' என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை(டிச.,28) எண்ணூர் துறைமுகத்திலிருந்து குழாய் வழியே கோரமண்டல் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய 8 டன் அமோனியா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.